Showing posts with label social. Show all posts
Showing posts with label social. Show all posts

Wednesday, September 11, 2019

நேர்மை

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால்,
அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம்,
உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:
அன்புள்ள ஊழியர்களே,
என்னுடைய ஓய்வுக்குப் பின்,
உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த மேலாளர் என்றார்.

இப்போது என் கையில்,
பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த,
ஏராளமான விதைகள் இருக்கின்றன.
யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது. 

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு,
உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி,
நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
ராமகிருஷ்ணன்க்கும் ஒரு விதை கிடைத்தது.
அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அவன் மனைவி தொட்டியும், உரமும்,தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து,
அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. 

நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் ராமகிருஷ்ணன்னின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம்.
செடி வளரவே இல்லை,

நாட்கள் உருண்டோடின.

ஆறு மாதங்கள் ஆனது. 

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார். 

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது. 

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

ராமகிருஷ்ணன் தன் மனைவியிடம்:
காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன்,
எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார். 

அவர் மனைவி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்:
நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள்.

செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.  தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமகிருஷ்ணன் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் அவைகளில் பூத்துக் குலுங்கின.

ராமகிருஷ்ணன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை.

எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

ராமகிருஷ்ணன் கடைசி வரிசையில் நின்றிருந்தார்.
அவரை அருகே வருமாறு அழைத்தார்.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்,
என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணன் உங்கள் செடி எங்கே?
என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணனை தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார். 

பிறகு ராமகிருஷ்ணன் தோளில் கையை போட்டுக் கொண்டு:

நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

ராமகிருஷ்ணன்னுக்கு ஒரே அதிர்ச்சி.

தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே!
பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்?
என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால்,
அது முளைக்க இயலாது.
அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால்,
அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ராமகிருஷ்ணன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார்.

ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

*நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.*

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும்,
நேர்மையும்,
தர்மத்தை பாதுகாக்கும்,

நேர்மை ஒரு போதும் வீண் போகாது.

*நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும்.*

புகழ் வர வேண்டாம்.

ஏனெனில்,

அந்த புகழுக்கு உரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே!

Wednesday, November 30, 2016

அபாயம்


தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர். காவல்நிலையத்திற்கு அருகே வீடு, இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன் " உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து, உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது, அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன், சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து," என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது. முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே, இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார். காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.

அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு. நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு. பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ, என் கணவர் மேல பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரிய இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, அக்டோபர், 2016. உடனே தனது மனைவிக்கு கால் செய்தார். அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார். வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் B-16 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு Expiry Date உள்ளது. அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.

அதை புரிந்து கொள்ளும் முறை.

A - January to March

B - April to June

C - July to September

D - October to December

எண்கள் - வருடத்தை குறிக்கும்

B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.

ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால், அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு, நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும். (  படத்தில் உள்ள சிலிண்டர், டிசம்பர் 2017ல் காலாவதியாகும். இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)

Thursday, October 13, 2016

சொர்கம்

அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.

ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.
"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்
வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.
ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.
""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!
பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.
""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''
துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.
காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.
திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.
""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து
விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று
இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.
""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்
வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''

அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த
காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.
பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத
குறையாகக் கெஞ்சினார்.
""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''
""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''
""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த
உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.
இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்
அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.

Sunday, October 9, 2016

பாட்டியும் கடலும்

😃😃😃😃😃😃😃😃😃😃

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு  கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி  என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி  கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா  இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து  தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு  கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( 🙁 )