Wednesday, July 11, 2018

ராஜாவும் பரிசும்

*_🌷🙏🏼🌷குட்டி கதை_*

_ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்._

_திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்._

_மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்._

_ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது._

_காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்._

_மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்._

_எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்._

_மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்._

_"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,_

_”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்._

_"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்._

_"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்._

_"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள் சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்._

_"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்._

_"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்._

_அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",_

_"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறார்._

_இளைஞன் சற்று தயங்குகிறான்,_

_"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,_

_"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்._

_வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்._

_"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார்._

_பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டார்..._
_ஆம்._

_"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,_

_அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்._

_அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்._

_வேலைக்காரர்கள் வேண்டும்._

_அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்._

_சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்._

_என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,_

_என்று . . . ,_

_இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்._

_இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்"._

_பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய ,_

_முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல்,_

_தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்._

_கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,_

_மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,_

_எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்._

*_முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்._*

Thursday, July 5, 2018

அப்பாக்கள் வரம்.

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

Tuesday, July 3, 2018

சிகரெட் விற்பனை

பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது, யாரும் குடிப்பதும் கிடையாது...!!
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் ஒரு பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான்..!!
.
சிகரெட் குடித்தால்..:-
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..!
2 உங்களுக்கு முதுமையே வராது..!
3 உங்களுக்குப் பெண் குழந்தையே பிறக்காது..!
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..!
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர், இந்தக் கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது...
.
சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்.
.
நீதிபதி அவரிடம்,
“இப்படி சில கருத்துக்களை விளம்பரம் செய்து உள்ளாய்.
இவை அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே?“ என்று கேட்டார்.
.
அதற்கு அவன்,
“முதலில் நான் என்ன சொன்னேன்...?"
1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.
"ஆமாம் வரமாட்டான்..!"
காரணம்? எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்பொழுதே இருமல் வந்து விடும்..!
இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. 😳
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரவேமாட்டான்...!
.
2 வது என்ன சொன்னேன்?
"முதுமையே வராது.."
ஆமா எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலேயே செத்து விடுவான். எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்?
"பெண் குழந்தை பிறக்காது..."
ஆமா எப்படி பிறக்கும்...?
சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். பிள்ளை பேறே இருக்காது ..!
இதில் ஆண் என்ன? பெண் என்ன..? பிள்ளையே பிறக்காது....!“
என்று சொல்லி முடித்தான்.
.
அவன் சொன்னது சரிதான்... நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி...!!
#இப்படி தந்திரமான பேச்சைதான்😜 விளம்பரம்* செய்வோர்கள் கையாள்கிறார்கள்....!!
நாம்தான்😳 விழிப்புடன் இருத்தல் வேண்டும்....!!

Monday, July 2, 2018

முட்டை நூடுல்ஸ்

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’

- விகடன்

ஒப்பனை

32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள் .
" அட, நீயா அது ? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள் .
😛
— MORAL: over makeup odambuku nallathu illa...

தேவை அற்ற போட்டிகள்

*தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்* !
                                                                              ‘ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.

மெதுவாய்  அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!

‘அப்பாடி, முந்தி விட்டேன்!’

பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!

சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான்  தெரிந்தது, நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!

அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.

இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?

நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?

நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.

நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.

இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.

எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு நல்லவர்களாக இருக்க நம்மால் முடியும், யாருடனும் போட்டி போடாமலேயே!

வாழ்க்கையில், பிறருடன் அனாவசிய போட்டியை தவிர்த்து நம் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்துவோம். நாமும் நன்றாக வாழ்ந்து பிறரையும் வாழ விடுவோம்!

எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்.

அரச உடை

அனைவரும்  படிக்க வேண்டிய ஒரு குட்டிக்கதை.

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. , உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார்.

அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத்தகுதி உடையவனாகி விட்டாய் அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன், மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.

மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை.
ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறுதி  தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்,

நமது தெய்வீக  வாழ்வில்    வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத ஆசை -  கவலை - கோபம் - பகை போன்றவை ,  எத்தனை  தெய்வீக இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனை போன்ற மாளிகையில்  கூட ,  இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

ஓலை  குடிசைகளில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் தான்  இருக்கிறது மகிழ்ச்சி.

தெய்வீக வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

உள்ளத்தை  குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்,

அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்போம்...