Wednesday, November 30, 2016

அபாயம்


தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர். காவல்நிலையத்திற்கு அருகே வீடு, இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன் " உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து, உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது, அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன், சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து," என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது. முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே, இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார். காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.

அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு. நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு. பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ, என் கணவர் மேல பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரிய இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, அக்டோபர், 2016. உடனே தனது மனைவிக்கு கால் செய்தார். அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார். வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் B-16 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு Expiry Date உள்ளது. அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.

அதை புரிந்து கொள்ளும் முறை.

A - January to March

B - April to June

C - July to September

D - October to December

எண்கள் - வருடத்தை குறிக்கும்

B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.

ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால், அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு, நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும். (  படத்தில் உள்ள சிலிண்டர், டிசம்பர் 2017ல் காலாவதியாகும். இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)

Friday, November 18, 2016

ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை


ஏ டி எம் இலக்கிய க்ளாசிக் வரிசை.

( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)

-@-

குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.

வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போக்கிறேன். எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும். இதுதான் அவரின் கட்டளை.

அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச்சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.

தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.

ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர்.

இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும்  குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது. ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.

ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது. என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.

அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.

குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான , தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,

If you don't know anything, create a problem and don't solve it..

என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.

குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?

சுபம்.
*.