Thursday, December 5, 2019

கடவுள்

தீர்க்கமான தரிசனம்
கடவுள் தரிசனம் யாருக்கு கிட்டும்.

இதோ ஒரு குட்டிக் கதை படியுங்கள்.

கடவுள் தரிசனம்  வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..

அதே  போல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்… நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தர வேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

“அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக் கொண்டு வா..காட்சி தருகின்றேன்” என்று சொல்லி மறைந்தார்..

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..
சிறிது உயரம் சென்றவுடன்..அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக் கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்..

மன்னன் “அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது… இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்” என்று உரக்க சப்தமிட்டான்..

அதற்கு “மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது” என்று ஒட்டு மொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக் கொண்டு மலையேற
துவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டை கட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்..”விலை மதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன”
என்று உரைத்தான்..

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்..

இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகு டும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்று விட..

மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்..செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக் கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..

அங்கே தென்பட்டது வைரமலை அதைப் பார்த்த ராணி முதற் கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..

மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்..

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி

“எங்கே உன் மக்கள்” என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக
“அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்” என்றான் மன்னன்..

அதற்கு கடவுள் “நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..
அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து…என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்” என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்…

Wednesday, September 11, 2019

நேர்மை

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால்,
அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம்,
உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:
அன்புள்ள ஊழியர்களே,
என்னுடைய ஓய்வுக்குப் பின்,
உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த மேலாளர் என்றார்.

இப்போது என் கையில்,
பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த,
ஏராளமான விதைகள் இருக்கின்றன.
யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது. 

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு,
உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி,
நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
ராமகிருஷ்ணன்க்கும் ஒரு விதை கிடைத்தது.
அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அவன் மனைவி தொட்டியும், உரமும்,தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து,
அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. 

நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் ராமகிருஷ்ணன்னின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம்.
செடி வளரவே இல்லை,

நாட்கள் உருண்டோடின.

ஆறு மாதங்கள் ஆனது. 

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார். 

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது. 

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

ராமகிருஷ்ணன் தன் மனைவியிடம்:
காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன்,
எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார். 

அவர் மனைவி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்:
நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள்.

செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.  தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமகிருஷ்ணன் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் அவைகளில் பூத்துக் குலுங்கின.

ராமகிருஷ்ணன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை.

எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

ராமகிருஷ்ணன் கடைசி வரிசையில் நின்றிருந்தார்.
அவரை அருகே வருமாறு அழைத்தார்.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்,
என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணன் உங்கள் செடி எங்கே?
என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணனை தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார். 

பிறகு ராமகிருஷ்ணன் தோளில் கையை போட்டுக் கொண்டு:

நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

ராமகிருஷ்ணன்னுக்கு ஒரே அதிர்ச்சி.

தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே!
பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்?
என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால்,
அது முளைக்க இயலாது.
அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால்,
அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ராமகிருஷ்ணன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார்.

ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

*நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.*

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும்,
நேர்மையும்,
தர்மத்தை பாதுகாக்கும்,

நேர்மை ஒரு போதும் வீண் போகாது.

*நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும்.*

புகழ் வர வேண்டாம்.

ஏனெனில்,

அந்த புகழுக்கு உரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே!

Wednesday, July 11, 2018

ராஜாவும் பரிசும்

*_🌷🙏🏼🌷குட்டி கதை_*

_ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்._

_திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்._

_மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்._

_ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது._

_காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்._

_மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்._

_எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்._

_மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்._

_"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,_

_”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்._

_"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்._

_"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்._

_"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள் சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்._

_"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்._

_"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்._

_அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",_

_"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறார்._

_இளைஞன் சற்று தயங்குகிறான்,_

_"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,_

_"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்._

_வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்._

_"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார்._

_பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டார்..._
_ஆம்._

_"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,_

_அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்._

_அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்._

_வேலைக்காரர்கள் வேண்டும்._

_அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்._

_சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்._

_என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,_

_என்று . . . ,_

_இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்._

_இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்"._

_பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய ,_

_முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல்,_

_தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்._

_கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,_

_மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,_

_எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்._

*_முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்._*

Thursday, July 5, 2018

அப்பாக்கள் வரம்.

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

Tuesday, July 3, 2018

சிகரெட் விற்பனை

பால.ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது, யாரும் குடிப்பதும் கிடையாது...!!
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் ஒரு பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான்..!!
.
சிகரெட் குடித்தால்..:-
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..!
2 உங்களுக்கு முதுமையே வராது..!
3 உங்களுக்குப் பெண் குழந்தையே பிறக்காது..!
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..!
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர், இந்தக் கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது...
.
சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்.
.
நீதிபதி அவரிடம்,
“இப்படி சில கருத்துக்களை விளம்பரம் செய்து உள்ளாய்.
இவை அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே?“ என்று கேட்டார்.
.
அதற்கு அவன்,
“முதலில் நான் என்ன சொன்னேன்...?"
1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.
"ஆமாம் வரமாட்டான்..!"
காரணம்? எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்பொழுதே இருமல் வந்து விடும்..!
இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. 😳
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரவேமாட்டான்...!
.
2 வது என்ன சொன்னேன்?
"முதுமையே வராது.."
ஆமா எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலேயே செத்து விடுவான். எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்?
"பெண் குழந்தை பிறக்காது..."
ஆமா எப்படி பிறக்கும்...?
சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். பிள்ளை பேறே இருக்காது ..!
இதில் ஆண் என்ன? பெண் என்ன..? பிள்ளையே பிறக்காது....!“
என்று சொல்லி முடித்தான்.
.
அவன் சொன்னது சரிதான்... நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி...!!
#இப்படி தந்திரமான பேச்சைதான்😜 விளம்பரம்* செய்வோர்கள் கையாள்கிறார்கள்....!!
நாம்தான்😳 விழிப்புடன் இருத்தல் வேண்டும்....!!

Monday, July 2, 2018

முட்டை நூடுல்ஸ்

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’

- விகடன்

ஒப்பனை

32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள் .
" அட, நீயா அது ? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள் .
😛
— MORAL: over makeup odambuku nallathu illa...