Monday, July 2, 2018

ஒப்பனை

32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள் .
" அட, நீயா அது ? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள் .
😛
— MORAL: over makeup odambuku nallathu illa...

தேவை அற்ற போட்டிகள்

*தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்* !
                                                                              ‘ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.

மெதுவாய்  அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!

‘அப்பாடி, முந்தி விட்டேன்!’

பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!

சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான்  தெரிந்தது, நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!

அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.

இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?

நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?

நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.

நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.

இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.

எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு நல்லவர்களாக இருக்க நம்மால் முடியும், யாருடனும் போட்டி போடாமலேயே!

வாழ்க்கையில், பிறருடன் அனாவசிய போட்டியை தவிர்த்து நம் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்துவோம். நாமும் நன்றாக வாழ்ந்து பிறரையும் வாழ விடுவோம்!

எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்.

அரச உடை

அனைவரும்  படிக்க வேண்டிய ஒரு குட்டிக்கதை.

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. , உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார்.

அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத்தகுதி உடையவனாகி விட்டாய் அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன், மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.

மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை.
ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறுதி  தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்,

நமது தெய்வீக  வாழ்வில்    வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத ஆசை -  கவலை - கோபம் - பகை போன்றவை ,  எத்தனை  தெய்வீக இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனை போன்ற மாளிகையில்  கூட ,  இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

ஓலை  குடிசைகளில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் தான்  இருக்கிறது மகிழ்ச்சி.

தெய்வீக வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

உள்ளத்தை  குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்,

அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்போம்...

Wednesday, June 6, 2018

வதந்தி

அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.
வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர்,  மனைவி பிள்ளைகள் இல்லை. 

ஆனால்,
"கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்".....!!

"மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்".....!!

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.

அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.

  மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.

"இவருக்கு அவன் மேல் சந்தேகம்".....!!

"திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்".......!!

"காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்"......!!

"சில நாள்களில் மாலையில் போகிறான்".......!!

"இரவில் வீடு திரும்புகிறான்"......!!

  "ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ".....!!

என நினைத்தார்....!!

"இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது".......!!

"தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்".......!!

காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.

`அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.

ஒருகட்டத்தில்,
    "போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்"......!!

ஆனால்,

'அவன் அப்பாவி'......,
  "அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும்".....,

"அவனை விடுவித்து விட்டார்கள்".....!!

ஆனால்,
   "அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது"......!!

  'நான் என்ன திருடனா'....? "என்னைப் போய் கைது செய்து விட்டார்களே".....!!

எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது’ என்கிற.....

" கோபமும் ஆற்றாமையும் எழுந்தது"......!!

அவன்,
"முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்"......!!

வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதியிடம் முதியவர்  சொன்னார்...

  "நான் யாரையும் காயப்படுத்தவில்லை".....!

"வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்"......!! 
" அவ்வளவு தான் ".....!!

டிரைவரோ,
   "போலீஸால் தான் அலைக்கழிக்கப்பட்டதை" .....,

  அந்த அவமானத்தால் மனது  பாதித்ததை.....,

  "பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் " என்பதை எடுத்துச் சொன்னான்.

"நீதிபதிக்கு டிரைவரின் நிலையும்".......,

"பெரியவரின் வீம்பும்  புரிந்தது".......!!

முதியவரை அழைத்து ...,

" நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்"......!!

  உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும்

ஒரு காகிதத்தில் எழுதி....,

அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து....,

போகிற வழியெல்லாம்.....,

" ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்"......!!

"நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.....!!

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

நீதிபதி...,

முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா".......?

ஆமாம் ஐயா.’’

நேற்று "நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்"......!!

"அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.....!!

"அது எப்படி ஐயா முடியும்"....?

"அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்"......!!

"அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது"....?

  "முடியாதில்லையா".....!!

அப்படித் தான்...
" நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை"......!!

"ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும்  ஆற்றல் கொண்டவை".....!!

"நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்"....!!

அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு....,

" நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்"......!!

உண்மையில்,

"வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது"......!!

ஏனென்றால்,

அது ஒரு மனிதனின் மதிப்பு,
    மரியாதை,
         கண்ணியம்,
             நல்ல குணம்
                 அனைத்தையும்
                   களவாடிவிடுகிறது.

"அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது".......!!

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்.....!!

நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை....

இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.

படித்ததில் பிடித்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Monday, June 4, 2018

கண்டிப்பு

*தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!*

*தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*

*ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*

*ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*

*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*

*மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*

*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*

*அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*

*இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*

*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*

*ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*

*எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*

*அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.*

குருவியும் சிறகும்

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு  அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.  அது பறந்து போகும் போது  ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.  அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று  குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்  அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று  அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி ✍️

ஆசை

👆ஆசை !! -

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.