Tuesday, September 13, 2016

பெருமை

                ஒரு கிராமத்தில் பெரிய பண்ணை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான ஆடுகளும் , கோழிகளும் , மாடுகளும் வளர்க்கப்பட்டன. அதில் ஒரு கொழுத்த எருதும், ஒரு நாயும் கூட இருந்தன. 
                 எருதும் , நாயும் முதலாளியின் செல்லப் பிள்ளைகள் போல இருந்தன. சிறு வயது முதலாகவே இரண்டுமே நல்ல நண்பர்கள். பண்ணையின் எந்த இடத்திலும் சுற்றித்திரிய அவற்றுக்கு உரிமை அளிக்கப் பட்டிருந்தது. முதலாளி சில நாட்களில் இரவு நேரங்களில் , முயல் வேட்டைக்கோ அல்லது காவலர்களைக் கண்காணிப்பதற்கோ செல்லும்போது மட்டும் நாயை உடன் அழைத்துச் செல்வார் . மற்ற நேரங்களிலெல்லாம் எருதும் , நாயும் ஒன்றாய் விளையாடும்.
             ஒரு நாள் முதலாளி , கடலைத் தோட்டத்தை சேதப்படுத்தும் முயல்களையும் , காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடுவதற்காக நாயை அழைத்துச் சென்றார். எருது மட்டும் தனியாக இருந்தது. மற்ற பிராணிகளெல்லாம் அதனதன் இடங்களில் அடைக்கப்பட்டிருந்தன.
            அப்போது ஒரு திருட்டு நரி கோழியையாவது , ஆட்டுக்குட்டியையாவது பிடித்துச் செல்லலாமென்று எண்ணி வேலிக்கு அடியில் பள்ளம் பறித்து பண்ணைக்கு உள்ளே வந்து விட்டது. பண்ணை முழுக்க சுற்றியும் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோழிகளும் , ஆடுகளும் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. நரி எவ்வளவோ முயற்சி செய்தும் உள்ளே நுழைய முடியவில்லை.
              நரி பண்ணையையே சுற்றிச் சுற்றி வந்தது . ஒன்றுமே கிடைக்கவில்லை . நடந்து நடந்து எருது இருக்குமிடத்துக்கு வந்துவிட்டது. திடகாத்திரமான உடலுடனும் , அச்சுறுத்தும் கொம்புகளுடனும் மலை மாதிரி நின்ற எருதைப்பார்த்து நரி ஒரு நொடி பயத்தில் ஆடிப் போய்விட்டது . 
             எருது இதுவரை நரிகளைப் பார்த்ததில்லை. எனவே நரியை வினோதமாகப் பார்த்தது .
" யார் நீ , இதுவரை உன்ன நான் இங்க பாத்ததே இல்லையே ? " என்றது. எருதின் பேச்சில் தொனித்த சிநேகம் நரிக்கு தைரியத்தைக் கொடுத்தது.
               " நான் நரிங்க. காட்டுக்குள்ளேருந்து வந்துருக்கேன். இந்த இடத்துல ஒரு பெரிய பலசாலி இருக்குறதா கேள்விப்பட்டேன் . அதனாலதான் உள்ள வந்தேன். நான் கேள்விப் பட்டதை விட நீங்க பெரிய பலசாலியாதான் இருக்கீங்க " என்றது .
               எருதுக்கு பெருமை தாளவில்லை. 
" என்னப் பாக்குறதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே ? " என்றது சந்தோஷமாய் .
" ஆமாம் , ராஜா . அதுக்காக மட்டுந்தான் வந்தேன் " என்றது நரி. இப்போது அதன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது . 
எருதுக்கு , " ராஜா " என்ற வார்த்தையைக் கேட்டது ஆனந்தமாக இருந்தது.
" என்னை ராஜான்னா சொன்னே ? "
என்றது.
                 " ஆமாம் ராஜா . உங்க பெருமை உங்களுக்கே தெரியலை . இப்ப நான் காட்டுக்குப் போய்ட்டு வந்து நாளைக்கு எல்லாம் விவரமா சொல்றேன் . என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. 
            அந்த இரவு முழுதும் எருதுக்குத் தூக்கம் வரவில்லை. மனசெல்லாம் இனம் புரியாத சந்தோஷம் . நரி தன்னைப் பற்றி சொன்ன ,
" பலசாலி , ராஜா " என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதுக்குக்குள் அசை போட்டு மகிழ்ந்தது. அடுத்த நாள் இரவுக்காகக் காத்திருக்கத் தொடங்கியது . 
                                ********
              காட்டுக்குச் சென்ற நரிக்கு ஒரே குதூகலம். எவ்வளவோ காட்டு விலங்குகளை அது சாப்பிட்டதுண்டு. ஆனால் ஒரு முறை கூட இப்படி ஒரு கொழுத்த எருதை ருசி பார்த்ததில்லை. தான் மட்டும் தனியாக  எருதிடம் மோதினால் ஐந்தே நிமிஷத்தில் எருது குடலை உருவி விடும் என்று நரிக்கு நன்றாகவே தெரியும். எனவே அது வேறொரு திட்டம் தீட்டியது.
               பகல் முழுவதும் காட்டுக்குள் அலைந்து , காட்டிலேயே சுவையான பழங்கள் , கிழங்குகள் , காய்கள் , மான்கள் விரும்பி உண்ணும் தாவரங்கள் போன்றவற்றை சேகரித்து மூட்டை கட்டியது. 
              அந்த நாளிலும் முதலாளிக்கு வேட்டை இருந்ததால் அன்று இரவிலும் நாய் அவருடனேயே வயலில் தங்கிவிட்டது. நரி சொன்னபடியே இரவில் எருதிடம் வந்துவிட்டது. தரை மட்டும் குனிந்து எருதை வணங்கி ,
" வணக்கம் மகாராஜா ! இது அடிமையோட காணிக்கை . 
ஏத்துக்குங்க " . கொண்டு வந்த பொருட்களையெல்லாம் எருதின் காலடியில் வைத்து வணங்கியது .
                எருதுக்குத் தலைகால் பிடிபடவில்லை. 
" என்னப்பா , என்னென்னமோ சொல்ற , ஏதேதோ செய்ற ?" என்றது குதூகலமாய் .
              " எல்லாம் பிறகு சொல்றேன் மகாராஜா. முதல்ல இந்தக் காணிக்கையை ஏத்துக்குங்க " . 
நரி கொடுத்த மூட்டையை எருது பிரித்துப் பார்த்தது. அடடா , மனதைத் கவரும் மணம் மிக்க உணவுப் பொருட்கள். ஒவ்வொன்றாய் ருசித்து மகிழ்ந்தது. இத்தனை வருட வாழ்க்கையில் கண்டிராத அருமையான சுவை . நரியின் அன்பில் எருதுக்குக் கண்ணீரே வந்து விட்டது. 
" ஆஹா என்ன ருசி ! என்ன ருசி ! உன்னோட அன்பும் , மரியாதையும் என்னைத் திணற அடிக்குது . உனக்கு நான் என்ன செய்யணும் ? " என்று கேட்டது.
           இதற்காகத்தானே நரியும் காத்திருந்தது ? கண்களில் கண்ணீரோடு ஆரம்பித்தது .
" மகாராஜா ! இத்தனை பலசாலியா, கம்பீரமா இருக்குற நீங்க இப்படி கிடைக்கிறத தின்னுகிட்டு , வேலிக்குள்ள சிறைப்பட்டு அடிமை வாழ்க்கை வாழலாமா ? என்னோட காட்டுக்கு வந்துடுங்க. அங்க ராஜாவா இருக்குற சிங்கத்தை அடிச்சு விரட்டிட்டு நீங்களே ராஜாவாயிடுங்க. இப்ப நீங்க சாப்பிட்ட மாதிரி ஆயிரக்கணக்கான உணவு வகைகள் அங்க இருக்குது. காலமெல்லாம் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள்லாம் இருக்கோம் . உடனே புறப்படுங்க.  உங்களை இப்படிப் பாக்க ரொம்ப வேதனையா இருக்கு ?" . கண்களைத் துடைத்துக் கொண்டது. 
              எருதும் அழுது விட்டது. 
" நீ சொல்றது உண்மைதான். இனிமே நான் அடிமையா வாழ மாட்டேன். என்னோட நண்பன் நாய் வந்தது சொல்லிட்டு நாளைக்கு ராத்திரி உன்னோட வர்றேன். ஆனா சிங்கம்னா எப்படி இருக்கும் ? நான் பாத்ததே இல்லையே ? " என்றது     
                தன்னுடைய திட்டம் நிறைவேற ஆரம்பித்ததைக் கண்டு நரி மனதுக்குள் சந்தோஷப்பட்டது .
" சிங்கம்ங்கறது ஒன்னுமேயில்லை மகாராஜா. நீங்க பூனை பாத்துருக்கீங்க இல்லையா ? அதுலயே கொஞ்சம் பெரிய பூனை . அவ்வளதான் என்றது.
               எருதுக்குப் பூனையென்றால் நன்றாகவே தெரியும். மூக்கால் ஒரு சீறு சீறிக் கழுத்தைத் தாழ்த்திக் கொம்பை  முட்ட வருவதுபோல் அசைத்தால் அரண்டு ஓடிப்போகும் பூனைகள் அதன் நினைவுக்கு வந்தது . 
" ஓ !சிங்கம்னா இவ்வளவுதானா? அப்பன்னா இனிமே காட்டுக்கு ராஜா நான்தான் " .  எருதின் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. 
         " சரிங்க மகாராஜா , நீங்க ஆயத்தமா இருங்க . நாளைக்கு ராத்திரி கிளம்புவோம். அடுத்த நாள்லேர்ந்து நீங்கதான் காட்டுக்கு ராஜா. யார் எது சொன்னாலும் காதுல வாங்கிக்காதிங்க. பொறாமைல ஏதாவது சொல்லி உங்கள தடுக்கப் பாப்பாங்க .    
ஏமாந்துடாதிங்க ". சொல்லிவிட்டு மீண்டும் எருதை விழுந்து வணங்கிவிட்டு
வெளியேறியது நரி .
                   
                            **********

             எதிர்பார்த்தது போலவே நாய் , காலையிலேயே வந்துவிட்டது. சுற்றி வளைக்காமல் விஷயத்தை சொல்லிவிட்டது எருது. நாய்க்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 
" நண்பா , எனக்கென்னவோ இது பெரிய ஏமாற்று வேலையாய்ப் படுது. இங்க உனக்குக் கிடைக்கிற பாதுகாப்பு வேற எங்கயுமே கிடைக்காது. என்னை மாதிரி அன்பான நண்பர்களை விட்டுப் போக நினைக்காதே " என்றது.
               எருது இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் உடனே பதில் சொன்னது .
" எது ஏமாற்று வேலை ? இத்தன வருஷமா என்னை முன்னேற விடாம அடைச்சு வச்சு , ஒவ்வொரு தேவைக்கும் உங்க கையை எதிர்பாக்க வச்சு அடிமையாவே வளத்ததுதான் ஏமாத்து வேலை . இப்ப நான் ராஜாவாகப் போறேன். சுதந்திரமான வாழ்க்கை , விதவிதமான உணவு வகைகள். எனக்கு வேண்டியத இனி நானே தேர்தெடுப்பேன் . மத்தவங்க குடுப்பாங்கன்னு காத்திருக்க வேண்டாம். தயவு செஞ்சு என் வழியில் என்னை விட்டுடு" என்றது.
                    அதற்கு மேல் நாய் ஒன்றும் பேசவில்லை. எருது இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. 
                        ************
            எருது எதிர்பார்த்திருந்தபடியே நரி நள்ளிரவில் வந்து சேர்ந்தது. எருது விட்ட ஒரே உதையில் கதவு திறந்து கொண்டது. நரியைப் பின் தொடர்ந்து ஓடியது .
            " நான் இனிமேல் ராஜா " என்று உற்சாகமாய் மனதுக்குள் சொல்லியபடி ஓடியது. விடிந்த போது இரண்டும் காட்டுக்குள் வந்துவிட்டன . பச்சைப் பசேலென்ற தாவரங்களும் , பாறைகள் வழியாய் ஓடி வந்த நீரும் எருதுக்குப் பரவசத்தை உண்டாக்கின. 
               " எங்க அந்த சிங்கம் ? அதை உதைச்சு விரட்டிட்டு நான் சீக்கிரம் ராஜாவாகணும் " என்றது. நரி
" இதோ நெருங்கிட்டோம் மகாராஜா " என்றது. சற்று நேரத்திலேயே சிங்கத்தின் குகை வந்து விட்டது.
              நரி வாசலில் நின்று அழைத்தது ,
" மகாராஜா , காணிக்கை கொண்டு வந்துருக்கேன் . ஏத்துக்குங்க . என்னையும் கொஞ்சம் 
கவனிச்சுக்குங்க "  என்று சத்தமிட்டது. 
எருதுக்கு ஒன்றுமே புரியவில்லை. 
" நரியின் கையில் ஒன்றுமே இல்லை. ஆனால் காணிக்கை கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறது.  ஒரு வேளை சிங்கத்தை ஏமாற்றி வெளியே கொண்டு வர நரி செய்யும் தந்திரமாக இருக்கலாம் . வரட்டும் அந்த சிங்கம் . ஒரு கை பார்த்து விடுவோம் " . எருது தயாராக நின்று கொண்டது.
               ஈரல் குலையை நடுங்க வைக்கும் உறுமலோடு சிங்கம் வெளியே வந்தது. அதன் கண்கள் நெருப்புத் துண்டங்களாய்ப் பிரகாசித்தது. 
" இதுவா சிங்கம் ? என்ன பயங்கரம் ! பெரிய அளவில் உள்ள பூனையென்று நரி சொன்னதெல்லாம் ? "
நரியின் முகத்தைப் பார்த்தது. நரி வாய் நிறையப் பல்லாக ,
" மகாராஜா, அருமையான உணவு கொண்டு வந்துருக்கேன். எனக்கும் ரொம்ப பசிக்குது. வேண்டியத எடுத்துக் கிட்டு அடிமைக்கும் ரெண்டு துண்டு வீசுங்க " என்றது.
               என்ன நடக்கிறது என்று எருது புரிந்து கொள்வதற்குள் சிங்கத்தின் வலுவான நகங்களும் , பற்களும் எருதைக் கிழித்து எருதின் உயிரைக் குடித்தன. ராஜாவாகும் ஆசையில் வந்த எருது சிங்கத்துக்கும் , வஞ்சக நரிக்கும் உணவாகிப் போனது.

செல்லமே ,
இன்று இது போன்ற வஞ்சக நரிகள் எழும்பி தேவபிள்ளைகளுக்கு வீணான இச்சைகளைக் காட்டிக், கர்த்தரின் பரிசுத்த ஐக்கியத்திலிருந்து அவர்களை திசை திருப்பி அவர்களை எளிதாகப் பட்சிக்க ஆரம்பித்து விட்டன. விரும்பியதையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற வாக்குறுதி எங்கிருக்கிறதோ அதற்குப்பின் சத்துரு பட்சிக்கும்படி வாய் பிளந்து அமர்ந்திருக்கிறானென்று உணர்ந்து கொள்.

              
" திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் "
யோவான் 10 :10

ஆறுதலின் தேவன் ஊழியங்கள் 
john46saravanan@gmail.com

Thursday, September 8, 2016

பெண்

ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள்.

அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம்.

அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.

ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பிரம்மா விஷ்னு மூவருக்கும் ஒரே குழப்பம்.

அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம் வருகிறார்கள்.

அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.

நான்போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி, அவள்கேட்கும் வரங்களை கொடுங்கள் என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதை ஆமோதிக்கிறார்கள்.

நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.

அவள் மலையிலிருந்து கீழே விழும் போது சொன்னாள் "எந்த லூசு பயடா என்னை எட்டி உதைச்சது".. அட்டென்ட் டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்.

இதனால நாம சொல்லுறது என்னன்னா பொண்களோட மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட தெரிஞ்சிக்க முடியாது . சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா..

கொஞ்சம் சிரிங்க பாஸ்

# கொஞ்சம் சிரிங்க பாஸ் ............

திருமணம் ஒன்று நடக்க விருந்தது. பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார்.

இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன். இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்."
கூட்டம் அமைதியாயிற்று. ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம்.

கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கூட்டத்தில் ஒரே கசமுசா. அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார் (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?).

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக்கொண்டார்கள். கூட்டம் செய்வதறியாது திகைத்து நின்றது.

மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மகனே, நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?).

கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. எல்லோரும் என்ன ஆகுமோ, இந்தக் கல்யாணம் நடக்குமோ நடக்காதோ?' என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க
பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார்,

"மகளே! உனது ஆட்சேபனை என்ன?"

அந்தப் பெண் சொன்னாள், "ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை."

ஹே திகில் ஜோக்.....

ரசிக்கணும்....

அடிக்கலாம் வரக் கூடாது ....... 😝😄

புரிதல்

ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.  அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச்செல்கிறாள்.  இளைஞன்: “ஏய் எருமை” என்றான்..  பெண்: “நீதான்டா நாய், குரங்கு, பண்ணி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்...  நீதி: எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை...

ஜோசப்பின் அங்கலாய்ப்பு

காய்கறிகள் விற்கும் கடை ஒன்று இருந்தது. அதில் ஜோசப் என்ற மனிதர் இருபது ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருந்தார்.
              அந்தக் கடையின் முதலாளி அவரது உழைப்பையும் , நேர்மையையும் வெகுவாக நேசித்தார். அங்கு பணிபுரிந்தவர்களிலேயே அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர். அவரது உணர்வுகளை முதலாளி மதித்தார். கடை திறக்கும்போதும் , மூடும்போதும் , வேறு   சில பண்டிகை நாட்களிலும் செய்யப்படும் எந்த சடங்குகளிலும் அவர் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படவில்லை. 
               ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அன்று மட்டும் யாருக்கும் விடுமுறை அளிப்பதில்லை. ஆனால் அவருக்கு மட்டும் ஆலயம் செல்வதற்காக , ஒவ்வொரு வாரமும் விடுமுறை அளிக்கப் பட்டது . கர்த்தர், தன்னுடைய வேலை ஸ்தலத்தில் தனக்குக் கிடைக்கும்படி செய்திருந்த சலுகைகளை எண்ணி அவர் அடிக்கடி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார். 
              முதலாளி ஒரு நாள் இறந்து போனார் . அவருடைய இடத்தில் அவருடைய மகன் இருந்து கடையை நிர்வகிக்கத் தொடங்கினான். வந்த முதல் நாளிலேயே ஜோசப் , அவன் கண்களுக்கு நெருடலாகத் தெரிந்தார் .
             கடையில் நடக்கும்  சடங்குகளுக்கு அவர் விலகியிருப்பதும் , நல்ல வியாபாரம் நடக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவருக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்படுவதும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அத்துடன் அவருடைய பல வருட அனுபவத்தின் நிமித்தமாக அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தில் இரண்டு இளைஞர்களை நியமித்தால் அது கடையின் வளர்ச்சிக்கு உதவும் என்று நினைத்தான்.
             ஒரு நாள் அவரைத் தனியே அழைத்து ,
" ஜோசப் நீங்க இருபது வருஷமா இங்கே இருந்துட்டீங்க. சில வருஷமா உங்க வேலை எங்களுக்கு திருப்திகரமானதா இல்லை. கடைக்காக நாங்க பூஜை நடத்தும்போது கலந்துக்குறதில்லை, நல்ல கூட்டம் வர்ர நாள்ல லீவு எடுத்துக்குறீங்க. இதெல்லாம் கடையோட வளர்ச்சியில நீங்க அக்கறை காட்டாததைத்தான் குறிக்குது. உங்களப் பாத்து நாளைக்கு மற்ற வேலையாட்களும் இதே மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா கடை என்னத்துக்கு ஆகும் ? உங்களுக்கு ரெண்டு முடிவு நான் தரேன். நீங்களா வேலையை விட்டுப் போனா கூடுதலா ஒருமாச சம்பளமும் , கொஞ்சம் பணமும் தர்ரேன் , நானா அனுப்பிட்டா உங்களுக்கு தேவையில்லாத கெட்ட பேர்தான் வரும். உங்க ஆளுங்கதான் நிறைய பேரு இந்தத் தொழில்ல இருக்காங்களே. அவங்ககிட்ட சேந்துட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது , அவங்களுக்கும் பிரச்சனையில்லை " . 
                உண்ணுகிற சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகிற காரியத்தை செய்துவிட்டு , ஏதோ சாதனை நிகழ்த்திவிட்டது போல அவர் முகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். வானம் இடிந்து தலைமேல் விழுந்தது போலிருந்தது ஜோசப்புக்கு. 
                 திருமணத்திற்குக் காத்திருக்கும் மகள் , கல்லூரிப் படிப்பில் கால் வைத்திருக்கும் மகன்கள். ஏற்கனவே இருக்கிற தேவைகளையே சந்திக்க முடியாமல் திணறும் வருமானம். இப்போது அதுவும் இல்லையென்றால் ? மனதிற்குள் கடைக்காக உழைத்த உழைப்பு நிழலாடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை விடப் பெரிய கடையிலிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அழைப்பு வந்ததும் , 
" இது கர்த்தர் எனக்காகக் கொடுத்த இடம் .இதை விட்டு நான் 
போகமாட்டேன் " என்று மறுத்துவிட்டதும் நினைவுக்கு வந்தது .
              முதலாளி மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜோசப்பிடம் பதில் இருந்தது . இருந்தாலும் எதுவுமே பேசவில்லை. அவன் கொடுத்த கவரை அணிச்சையாய் வாங்கி சட்டைக்குள் வைத்துக் கொண்டார். எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறினார் .
              " கர்த்தாவே , ஏன் இதை அனுமதிச்சிங்க ? இனி எப்படிக் குடும்பத்தை நடத்துவேன் ? அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் கேலியா பாப்பாங்களே . பெண்டாட்டி , பிள்ளைகளுக்கு இதை எப்படி சொல்லப் போறேன் ? இப்படி  திடுதிப்னு துரத்தி விடுற அளவுக்கு அவ்ளோ பெரிய குற்றவாளியா நான் ? " மனது புலம்பிக் கொண்டிருக்க வீட்டை நெருங்கி விட்டார். 
                  " ஏசுவே , இந்த விஷயத்தை வீட்டுல சொன்னா என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலை. நீங்கதான் அவங்க மனசை திடப்படுத்தணும். கையில இருக்கிற பணம் முடியறதுக்குள்ள அடுத்த வழியைக் காட்டுங்கப்பா " .  சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தார். 
           லேசான தலை சுற்றலும் படபடப்பும் சிறியதொரு தடுமாற்றத்தைக் கொடுத்தன. 
" என்னங்க , அதுக்குள்ள திரும்பிட்டிங்க ? " என்ற ஷீலாவிடம் ,
" ஒடம்பு என்னமோ போல இருந்தது , அதான் ". அவர் பதிலில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஷீலா தொடர்ந்தாள். 
                " ரெண்டு மூனு நாளாவே கர்த்தர் ஒரு வசனத்தைக் கொடுத்துக் கிட்டே இருந்தாருங்க . 
" நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் " . மல்கியா 4 :2 .  எதுக்காக இந்த வசனத்தைக் கர்த்தர் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்கார்னு கேட்டு ஜெபம் பண்ணேன். இன்னிக்கு காலைல நீங்க கடைக்குப் போனதும் கர்த்தர் இதுக்கான விடையைக் கொடுத்தார் ".
              ஜோசப்புக்கு வியர்த்து விட்டது,
" அதுக்குள்ள உண்மை தெரிஞ்சு போச்சா ? " . அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஷீலா தொடர்ந்தாள் .
" நம்ம சபைக்கு ராகேல்னு ஒரு அம்மா வருவாங்க தெரியுமா , மேட்டுத் தெரு ? காய்கறிக்கடை ? அவங்க மகனும் , மருமகளும் கூட ஜெர்மெனில இருக்காங்களே? " . ஜோசப்புக்கு நினைவு வந்தது. 
               ராகேல் அம்மா. சபையில் அடிக்கடி சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும் பெண்மணி. பல பாடுகளுக்கு மத்தியில் காய்கறி வியாபாரம் செய்து மகனைப் படிக்க வைத்து , வெளிநாட்டுக்கு அனுப்பியும் வியாபாரத்தை மட்டும் விடாமல் செய்து வரும் உழைப்பாளி. 
            " அவங்களுக்கு என்னாச்சு ? " ஜோசப். 
" அவங்களுக்கு ஒன்னும் ஆகல " 
ஷீலா தொடர்ந்தாள். 
" மருமகளுக்கு அம்மா கிடையாது . அப்பா மட்டுந்தான் . இப்ப அந்தப் பொண்ணு மாசமா இருக்குதாம். பிரசவத்தை அங்கேயே வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். அந்தம்மாவுக்கு இப்ப விசா , டிக்கெட்லாம் ரெடியாயிடுச்சாம் . அடுத்த மாசம் கிளம்புறாங்க . குழந்தை கொஞ்சம் வளந்து அவங்க திரும்பி வர எப்படியும் ரெண்டு வருஷம் ஆயிடுமாம் . அதுவரைக்கும் கடையைப் பூட்டி வச்சிருக்க முடியாது . வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சா திரும்ப கடையை வாங்குறது கஷ்டம் " . 
          ஜோசப்புக்கு இப்போது கொஞ்சம் புரிந்ததது. 
" அதனாலதான் , கடையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போனா நல்லதுன்னு நினைக்கிறாங்க. வாடகை ஒன்னும் தர வேண்டாம் . கரன்ட் பில்லும் , வரியும் மாத்திரம் கட்டிக்கிட்டு இருந்தா போதும். எனக்கென்னமோ கர்த்தர் கொடுத்த வசனத்துக்கும் , இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குதுன்னு தோனுதுங்க . நீங்களும் ‍எத்தனை நாள்தான் இப்படியே மத்தவங்களுக்கே உழைச்சுக் கொடுப்பீங்க ? உங்க உழைப்பும் , அறிவும் நமக்குப் பயன்படட்டுமே. அந்தம்மா வரதுக்குள்ள நாம கொஞ்சம் சம்பாதிச்சு வேற இடத்துல கடை ஏற்பாடு  பண்ணிக்கலாம். இப்போதைக்கு நீங்க கொஞ்சம் பணம் மட்டும் ரெடி பண்ணிட்டா போதுங்க ".
               ஜோசப் கண்மூடி ஜெபித்தார் , 
" ஆண்டவரே , நீங்க எதை செய்தாலும் அது எங்க நன்மைக்காகத்தான் இருக்கும்ங்கறத ஒரு நிமிஷம் மறந்து ஏதேதோ புலம்பிட்டேன். மன்னிச்சிடுங்கப்பா . சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தேவன் என்னை வெட்கப்பட்டுப் போக விடமாட்டிங்க. நன்றிப்பா. இனியும் நடத்துங்கப்பா " . 
               அவர் ஜெபித்து முடித்துக் கண்களைத் திறக்கும்போது வீட்டுக்குள் அப்துல் வருவதைப் பார்த்தார். அப்துல் பல வருடங்களாக அவர்களது கடைக்குக் காய்கறிகள் சப்ளை செய்து வருபவர் .
             " என்னா ஜோசப்பு , என்னமோ கேள்விப்பட்டேன் . நீ ஒன்னும் கவலைப்படாதே. இது ஒனக்கு நல்ல நேரம்னு நெனைச்சுக்க. புதுசா வர்ர பயலுவளுக்கு , ஏற்கனவே இருக்குற ஆறுகள்லாம் முட்டாளு , தாம் மட்டுந்தான் புத்திசாலின்னு தோனும். அவனுக்கு உன் அருமை தெரியலை. நான் சொல்ற கேளு. நீ சின்னதா ஒரு கடய மட்டும் புடி. சரக்கு ஃபுல்லா நான் தரேன். சாய்ங்காலம் வித்துட்டு நீ பணம் குடுத்தா போதும் " குரலைத் தாழ்த்திக் கேட்டார். 
" வீட்டு செலவுக்கு , புதுசா கடையை புடிக்க ஏதாச்சம் காசு , கீசு வேணாலும் கூச்சப்படாம கேளு ". 
               ஜோசப் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். 
" செலவுக்கெல்லாம் காசு இருக்குது பாய் . கடையும் ரெடியாயிடுச்சு. ஒரு வாரத்துக்குள்ள எல்லாமே பண்ணிட்டு சொல்றேன் பாய் . ரொம்ப  நன்றி " .
அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார். 
" ஷீலா, கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதிப் படுத்துறார் . டீ எடுத்துட்டு வா " என்றார் .

செல்லமே , 
சில நேரங்களில் மனிதர்கள் உனக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாய்த் தோன்றலாம். ஆனாலும் கர்த்தர் எதையும் காரணமின்றி அனுமதிப்பதில்லை. உன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்தது என்று உணர்ந்து கொள்.

" அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் "  

1 சாமுவேல் 2 :8

Wednesday, January 5, 2011

இரண்டு தவளைகள்

சில தவளைகள் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தன. அங்கே ஒரு ஆழமான குட்டையில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. அதை பார்த்த மற்ற தவளைகள், அங்கே இருந்து மேலே வர முடியாது, நீங்க ரெண்டு பேரும் செத்து போன மாதிரிதான், அப்டீன்னு சொல்லி கத்திகிட்டு இருந்ததாம்.

இதை கேட்ட ஒரு தவளை உள்ளே விழுந்து செத்து போனதாம்.

மற்ற தவளை மிகவும் வேகமாக முயற்ச்சி செய்து கொண்டு இருந்த்தது. இதை கண்ட மற்ற தவளைகள் முன்பை விட அதிகமாக விழுந்து உயிரை விடும்படி கத்தியதாம்.

இதை கண்ட தவளை முன்பை விட அதிகமாக முயற்சித்து வெளியே வந்ததாம்.

மற்ற தவளைகள், இதை பார்த்து உனக்கு நாங்க சொன்னது கேட்கலையா? என்று கேட்டதாம்.

இது சொன்னதாம் "என்னக்கு காது கேட்காது".